டெல்லி:

மணிப்பூரில் கடந்த 16 ஆண்டு காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக சேவகி இரோம் சர்மிளா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த போராட்டத்தை முடித்துக் கொண்டார். 44 வயதாகும் அவர் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த முடிவை எடுத்தார்.

இவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து, தேர்தலில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று தனது அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினார். மேலும், கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி தொண்டர்கள் தனக்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று இரோம் சர்மிளா கோரிக்கை விடுத்தார்.

மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து தொவுபால் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக பாஜ சார்பில் போட்டியிட பல கோடி ரூபாயுடன் பேசப்பட்ட பேரத்தை நிராகரித்துவிட்டு போட்டியிட் டுள்ளார்.

இந்நிலையில் இவரது தேர்தல் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாயை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘பொதுமக்கள் அவரது ‘‘மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணிக்கு’’ தாராளமாக நன்கொடை வழங்க முன்வர வேண்டும்’’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.பி பகவான் மான் இரோம் சர்மிளாவுக்கு நன்கொடை அளிக்க முன் வந்துள்ளார். காமெடியனாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், ‘‘தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங் குகிறேன். மணிப்பூரில் ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக அவர் போராடி வருகிறார்’’ என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.