டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காஜிப்பூர், திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் விவசாயிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஆம் ஆத்மி அரசு ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், போராட்டத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட உள்ளது.