டெல்லியில் 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் கெஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு

டெல்லி: டெல்லி மாநில முதலமைச்சராக 3வது முறையாக பதவியேற்றார் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ராம்லீலா மைதானத்தில் அதற்கான விழா நடைபெற்றது. விழாவில் 3வது முறையாக முதலமைச்சராக அர்விந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா மீண்டும் பதவியேற்றார். கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோரும்  அமைச்சர்களாக பதவியேற்றனர்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக துப்புரவு பணியாளர், ஆசிரியர் என பல துறையைச் சார்ந்த அரசு பணியாளர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வைரலான ஜூனியர் மப்ளர்மேன் குழந்தையும் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார்.

அண்மையில் முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களில் வென்றது. காங்கிரசுக்கு 1 இடம் கூட கிடைக்கவில்லை.