உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகி வரும் மேரி கோம்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார். உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெற்று அதன் டைட்டிலை பெறுவதே மேரிகோமின் நீண்ட கால கனவாக உள்ளது.

Smart

35வயதுடைய மேரி கோம் தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். அடுத்து நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் அவரை எதிர்ப்பார்க்கலாம். அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இளம் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று பேசி வரும் மேரி கோம், காமன் வெல்த், கோல்ட் கோஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் பெண்கள் ஒரு பதக்கம் கூட வாங்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

வரலாறு படைக்கும் விதமாக உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியின் ஆறாவது டைட்டிலை கைப்பற்றி அதன் கிரீடத்தை வெல்ல வேண்டும் என்றும், அதற்கு ஏற்றார்போல் பயிற்சி எடுத்துவருவதாகவும் மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும் “போட்டியின் போது இதுவரை நான் காயமடைந்ததில்லை, 100 சதவிகித பயிற்சியில் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெறுவது எனது இலக்கு” என்று அவர் கூறினார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு இரண்டு முதல் 3 மணி நேரம் வரை பயிற்சி எடுப்பேன். தற்போது அதுபோன்று பயிற்சி எடுக்க தேவையில்லை. ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி எடுக்க போதுமானது. அந்த ஒரு மணி நேர பயிற்சியை திறம்பட செய்கிறேன் என்று அவர் கூறினார். பெண்கள் நன்கு பயிற்சி எடுக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள், அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும். இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டு கொண்டார்.

விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஒரு தாயாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. தனது குழந்தைகளுக்காக அவர்களால் நேரம் ஒதுக்க முடியாது. எனது குழந்தைகள் குத்துசண்டைகளை பார்த்து ரசிக்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் வலி அவர்களுக்கு தெரியாது. நான் சிறந்த தாயாகவும், வீராங்கனையாகவும் இருக்க விரும்புகிறேன். ஆனால் குழந்தைகளுடனான எனது உறவு முழுமையாக இல்லை. குழந்தைகளுக்காக நான் நேரம் ஒதுக்காதது வருத்தமளிக்க கூடிய ஒன்று. இருப்பினும் எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன் “ என்று தாய்மை உணர்வுடன் மேரி கோம் தெரிவித்தார்.