பறிமுதல் செய்யப்பட்ட காரில் பவனி வந்த காவலர்கள் : 3 மணி நேரம் சிறை பிடித்த உரிமையாளர்

க்னோ

ன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காரில் 3 காவல்துறையினர் பயணம் செய்ததை அறிந்த உரிமையாளர் அவர்களை 3 மணி நேரம் வாகனத்துக்குள் பூட்டி வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச  மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள கோம்திநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் அங்கிருந்து 145 கிமீ தூரமுள்ள லகிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நயிபஸ்தி கிராமத்துக்கு ஒரு விசாரணைக்காகச் சென்றுள்ளார்.   அவர்கள் அந்த காவல் நிலையத்தில் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சொகுசுக் காரில் சென்றுள்ளனர்.

இதை அறிந்த காரின் உரிமையாளர் தன்னிடம் இருந்த ஜிபிஎஸ் வசதி கொண்ட பூட்டு மூலம் தனது இருப்பிடத்தில் இருந்தே காரை பூட்டி உள்ளார்.   ஒரு கார் திருட்டுப் போய் விட்டால் இத்தகைய பூட்டுக்கள் மூலம் உரிமையாளர் தனது பாஸ் வார்ட் மூலம் உடனடியாக பூட்ட முடியும்.   அதன்பிறகு உள்ளே மற்றும் வெளியே உள்ளவர்களால் கதவை திறக்க முடியாது.   எஞ்சினும் வேலை செய்யாது.

இவ்வாறு சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் அந்த மூன்று காவல்துறையினரும் காரினுள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.   தனது காரை காவல்துறையினர் தவறாகப் பயன்படுத்துவதாக உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.   அதன் பிறகு அந்த காரை ஜிபிஎஸ் மூலமாகவே இருக்குமிடத்தை கண்டறிந்த காவல்துறை ஆணையர் மூவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு உரிமையாளர் காரை இங்கிருந்த படியே திறந்து மூவரையும் விடுவித்துள்ளார்.