நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு

ஸ்ரீநகர்

நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.    அதன்பிறகு அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.   ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அந்தப் பகுதியில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.   பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மாநிலம் எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது கட்டுப்பாடுகள் சிறித் சிறிதாக விலக்கப்பட்டு வருகின்றன.   ஒரு சில இடங்களில் தொலைத் தொடர்பு வசதி அளிக்கப்பட்ட போதிலும் இணைய வசதி முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் பல இடங்களில் போராட்டம் காரணமாக சில மணி நேரம் மட்டுமே கடைகளும் அலுவலகங்களும் திறக்கப்படுகின்றன.

புதன்கிழமை அன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது.  இயல்பு வாழ்க்கை திரும்பியதால் மாநிலத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அலுவலகங்களும் முழு நேரம் இயங்குகின்றன.  சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

ஆனால் நேற்று அதாவது அமித்ஷாவின் அறிவிப்புக்கு அடுத்த நாள் மீண்டும்கல்வரம் ஏற்பட்டதால் வர்த்தகர்கள் அவர்களே கடைகளை மூடி உள்ளனர்.  அத்துடன் வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து ஷேக் ஆஷிக் என்னும் வர்த்தகர் “இந்த கலவரத்துக்குக் காரணம் அமித்ஷா இங்கு அமைதி திரும்பியதாக அறிவித்ததாகும்.   அவர் தேவை இல்லாமல் இங்கு நாங்கள் மகிழ்வுடன் இருப்பதாக உலகுக்குக் காட்ட இத்தகைய அறிவிப்புக்களை வெளியிடுகிறார்.  இதனால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்” என தெரிவித்துள்ளார்.