விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி..  அலறியடித்த சென்னைவாசிகள்…. 

--

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி.. அலறியடித்த சென்னைவாசிகள்….

பலபேரைப் பலிவாங்கிய விசாகபட்டினம் விஷ வாயுக்கசிவு விபத்தின் தடம் மறைவதற்குள்ளாகவே சென்னை மணலியில் உள்ள யூரியா தயாரிக்கும் ஒரு பொதுத்துறை  ஆலை ஒன்றிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

மாத்தூர் எம்எம்டிஏ காலனியில் வியாழனன்று இரவு தூக்கத்தில் இருந்த பெரும்பாலானோருக்குக் கண்களில் எரிச்சல், தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டதுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது. விசாகபட்டினம் வாயுக்கசிவு நடந்து சிலநாட்களே ஆன நிலையல், பயந்து போன அனைவரும் பீதியுடன் தெருவுக்கு ஓடிவந்துள்ளனர்.

அக்காலனியின் செயலாளர் பாபு, “வெயில் காலமாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் ஜன்னல்லாம் திறந்தே தான் இருக்கு.  உடனே மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு கம்ப்ளைண்ட் பண்ணினோம்.  இந்த ஏரியா முழுசும் துர்நாற்றமா இருக்கிறதோட சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கு.  காயப்போட்டிருந்த துணிகள் எல்லாம் கூட கலரே மாறி மோசமா பாதிக்கப்பட்டிருக்கு.  அந்தளவு இந்த அம்மோனியா கசிஞ்சிருக்கு.  உடனே இதைத் தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார் பதட்டத்துடன்.

சுற்றுச்சூழல் பொறியாளர் இந்திராணி இந்த இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளார்.  தற்போது காற்று சாதாரணமடைந்திருந்தாலும் இது பற்றிய அச்சம் இன்னமும் நீங்கியபாடில்லை.

பராமரிப்பு வேலைகள் நடைபெற்ற போது சிறிய அளவிலான அம்மோனியா கசிந்ததே இதற்குக் காரணம் என்றும், இதைச் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் கவனிக்கத்தவறிவிட்டனர் என்றும் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

மீண்டும் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் முக்கிய கடமை என்பதை உணர்ந்து நடந்து கொள்வது மிகவும் முக்கியம்.

– லெட்சுமி பிரியா