மதுவிலக்கை நோக்கி நகரும் ஆந்திரா : மது பயன்பாடு 48% குறைந்தது

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மது பயன்பாடு 48% குறைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முழு மதுவிலக்கு கோரிக்கை கடந்த 1990களில் இருந்தே உள்ளது.  கடந்த 1994 ஆம் வருடம் எழுந்த இந்த கோரிக்கையால் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான என் டி ராமராவ் முழு மதுவிலக்கு கொண்டு வருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.   அவர் ஆட்சி அமைத்த உடன் மாநிலத்தில் முதல் முறையாக முழு மதுவிலக்கை 1995 ஆம் வருடம் ஜனவரி மாதம் அறிவித்தார்.

ஆனால் 1997 ஆம் வருடம் சந்திரபாபு நாயுடு முதல்வரான பிறகு அவர் பொருளாதார இழப்பு மற்றும் எல்லையோர மது விற்பனை உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி மதுவிலக்கை ரத்து செய்தார்.   இந்நிலையில் இந்த வருடம் நடந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மே மாதம் 30  ஆம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார்.

ஆந்திர மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து பார்கள் மற்றும் தனியார் மதுக்கடை உரிமங்களை ரத்து செய்தார்.   அத்துடன் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை அரசு நடத்தும் என உத்தரவிட்டார்.    அது மட்டுமின்றி ரத்து செய்யப்பட்ட பார் உரிமத்தை மீண்டும் புதுப்பிக்கும் கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தினார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள  விதிகளுக்குப் புறம்பான மதுக்கடைகள் 40000, உரிமம் பெற்ற மதுக்கடைகள் 880 உள்ளிட்டவை மூடப்பட்டன.  தற்போது 3500 உரிமம் பெற்ற அரசால் நடத்தப்படும் மதுக்கடைகள் மட்டுமே உள்ளன.   இதனால் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.  கடந்த மே மாதம்முதல் அக்டோபர் வரை சென்ற வருட மது விற்பனையை விட 47.87% குறைவாக மது விற்பனை ஆகி உள்ளது.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் அரசுக்கு மது விற்பனை மூலம் ரு.1701.24 கோடி கிடைத்து வந்த நிலையில் இந்த வருடம் அதே மாதம் ரூ.1038.899 கோடி மட்டுமே வருமானம்  கிடைத்துள்ளது.   கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மதுக்கடைகளுடன்  அருந்தும் மதுக்கூடங்கள் மூடப்பட்டன.  அத்துடன் அரசு மதுக்கடைகள் இரவு 8 மணியுடன் மூடப்பட்டன.  இதனால் ஆண்கள் நேரத்துக்கு வீடு திரும்புவதாகவும் வீட்டு ஆண்கள் குடிக்காமல் வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ஆந்திர மகளிர் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andhra, liquor consumption comes down, liquor shops reduced, Prohibition, women happy, ஆந்திரா, மகளிர் மகிழ்ச்சி, மது பயன்பாடு குறைவு, மது விலக்கு, மதுக்கடைகள் குறைப்பு
-=-