சென்னை

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் நிலையில் அங்கு பாஜக அதிகத் தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையாமல் உள்ளது.  நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு காண முடியாமல் தோல்வியில் முடிந்தது.  நேற்று பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டவில்லை.  இன்றும் பேச்சு வார்த்தை தொடர உள்ளது.

இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர், “அதிமுகவின் கோட்டையாகக் கொங்கு மண்டலம் உள்ளது.  கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது.  சிங்காநல்லூர் மட்டும் திமுக வசம் உள்ளது. ஆனால் பாஜக கொங்கு மண்டலத்தைக் குறி வைத்துள்ளது.

இங்கு பாஜக சற்று கூடுதல் பலத்துடன் உள்ளதாகக் கருதப்படுகிறது.  ஆகவே இங்கு 5 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளது.   கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், கிணத்துக்கடவு தொகுதியில் அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதியில் எஸ் ஆர் சேகர், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஜி கே செல்வகுமார் எனக் களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அப்படி இல்லையென்றால் அதில் 3 தொகுதிகளையாவது பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.  அத்துடன் திருப்பூர், நீலகிரி, சேலம் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் பாஜக ஒரு சில வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுள்ளன.   இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவற்றை வழங்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது.  மேலும் கட்சியில்  பல முக்கிய பிரமுகர்களும் இதனால் அதிருப்தி அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.