ஊதியம் அளிக்காத பி எஸ் என் எல் : உணவுக்கு திண்டாடும் ஊழியர் குடும்பம்

டில்லி

பி எஸ் என் எல் நிறுவன கணவன் அற்ற பெண் ஊழியர் ஊதியம் இல்லாததால் வறுமையில் வாடி வருகிறார்.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தற்போது கடும் நிதிப்பற்றாக்குறையில் இருந்து வருகிறது.    ஒவ்வொரு மாதமும் கடைசி தினத்தன்று பி எஸ் என் எல் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.   ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக சென்ற மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

இதை ஒட்டி சென்ற வாரம் பி எஸ் என் எல் ஊழியர் சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்தினார்கள்.   அப்போது ஊதியம் விரைவில் வழங்கப்படும் என நிர்வாகம் வாக்குறுதி அளித்தது.   ஆயினும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வரவில்லை.

இது குறித்து பி எஸ் என் எல் கடைநிலை பெண் ஊழியரான பினு பாண்டே என்பவரின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.   அவர் அந்த வீடியோவில், “நான் கணவன் அற்றவர்.   எனது சிறு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது.

எனது வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாக உள்ளதால் ஊதியம் கிடைக்க இரு தினங்கள் தாமதமானாலும் எனது வாழ்க்கை தடுமாற்றம் அடையும்.   எனக்கு ஒரு பியூனின் ஊதியம் தான் கிடைக்கிறது.    ஆகவே என்னால் எவ்வித சேமிப்பும் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஒவ்வொரு மாதமும் எனது ஊதியம் வந்த 10 நாட்களுக்குள் அந்தப் பணம் செலவாகி விடும்.    தற்போது ஊதியம் இதுவரை அளிக்கப்படாததால் என்னால் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் கடன் வாங்கி வருகிறேன்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.