சென்னை: தலைநகர் சென்னையை விட மாவட்டங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் சிறப்பான முறையில் செயல்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் இன்னமும் ஓயவில்லை. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினமும் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் முக்கிய மையமாக சென்னை மாறிவிட்டது.
கிட்டத்தட்ட மொத்தமுள்ள 7000 கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் பாதி சென்னை மண்டலங்களில் பதிவானவை. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை பெருநகரத்தில் கொரோனா தொற்று மண்டலங்களில் தடுப்பு பணிகள் மிக பெரிய கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 513 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள குடியிருப்பாளர்களின் ஒத்துழையாமை கொரோனா பரவலுக்கு காரணமான இருக்கிறது. மக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கொண்டிருக்கும் மோசமான, பிணைப்பில்லாத தொடர்பும் இதற்கு காரணமாக அமைகிறது.
அவர்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. முகக்கவசங்கள் அணியாமல் உலா வருதல், சிறிய கடைகள், ஏடிஎம்கள், வங்கிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பவர்களை அவர்கள் அனுமதிக்கின்றனர். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள பொது கழிப்பறைகள் கூட மண்டலங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலர் பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்த விஷயத்தில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்கள் வித்தியாசப்படுகின்றன.
மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்பு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களுடன் தொடர்பில் இருந்தன, சமூக ஊடகங்களை விரிவாக பயன்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை செய்திருக்கின்றன. அத்யாவசிய பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதிசெய்தன.
ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த முடக்கங்கள் பணிநிறுத்தத்தை அறிமுகப்படுத்தின. காவல்துறை சோதனைச் சாவடிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கட்டுப்பாடடு மையங்களில் இருந்த  குடியிருப்பாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை  பயன்படுத்தினர். அத்யாவசிய நோக்கங்களுக்காக வெளியேற வேண்டிய போதெல்லாம் சமூக தூரத்தை கடைபிடித்தனர். இதற்கு சிறந்த உதாரணம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியாகும்.
மாவட்ட நிர்வாகத்தால் முகக்கவசங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே நாங்கள் அணிய தொடங்கிவிட்டோம் என்கின்றனர் அங்கு குடியிருந்து வருபவர்கள். சில நாட்களுக்கு அப்பகுதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதே போன்று தான் நீலகிரி மாவட்டமும். ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், முன்கூட்டியே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது, கொரோனா தொற்றை தடுக்க எளிய வழியாக அமைந்தது என்றார்.
கோவை ஆட்சியர் ராசாமணி கூறுகையில், 26 பகுதிகளில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மக்களின் ஒத்துழைப்பால் இது நடந்தது என்றார். திருப்பூர் ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் கூறுகையில், சுற்றுப்புறங்களில் கட்டுப்பாடு கண்டிப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு மண்டலத்தில் பெரிய அளவில் கிருமிநாசினி நடவடிக்கைகள் உதவியது என்றார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான முடக்கத்தை மாநிலத்தில் செயல்படுத்தியதில் நாங்கள் முதன்மையானவர்கள் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறினார்.