டில்லி

டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது.

டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் இருந்த டில்லி பாதிப்பு அதிகரிப்பால் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 70.4 ஆயிரம் பேர் பாதிப்பு  அடைந்து 2300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டில்லியில் தினசரி 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைவதால் இந்த வேகத்தைக் கணக்கிடும் போது விரைவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.  இவ்வாறு அதிகரிக்கும் போது அதற்கேற்ற வகையில் சிகிச்சைக்காக படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஐசியூக்கள் தேவையும் அதிகரிக்கும்.

தற்போது டில்லியில் சுமார் 6000 படுக்கைகள் மட்டுமே உள்ளன எனவும் மேலும் படுக்கைகள் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.   ஆனால் படுக்கைகள் அதிகரிப்பது மட்டும் நோயாளிகள் சிகிச்சைக்கு போதுமானதாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டில்லி ஆளுநரிடம் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த 10 ஆம் தேதி தெரிவித்த கணக்கின்படி ஜூலை 15 ஆம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை  2.5 லட்சத்தைத் தாண்டும் என்பதால் சுமார் 33000 படுக்கைகள் தேவைப்படும்.  அத்துடன் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பாதிப்பு 5.5 லட்சமாக உயரக்கூடும் என்பதால் 80000 படுக்கைகள் அப்போது தேவைப்படும்.

அது மட்டுமின்றி பல நோயாளிகள் அபாயமான நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐசியு வார்டுகள் மற்றும் வேண்டிலேட்டர்களும் அதிக அளவில் தேவைப்படும்.  தற்போது அதிகரிக்கப்பட உள்ள படுக்கைகளில் இந்த வசதிகள் அளிக்கப்படுமா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை என ஒரு மருத்துவ நிபுணர் கவலை தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள நிலவரப்படி தினசரி உறுதியாகும் நோயாளிகளில் 2% பேருக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது.  இதைப் போல் 4% பேருக்கு ஆக்சிஜன் அல்லது ஐசியு வின் அனுமதி தேவைப்படுகிறது. தற்போது டில்லியில் உள்ள 735 வெண்டிலேட்டர்களில் மாநில அரசு மருத்துவமனைகளில் 167, மத்திய அரசு மருத்துவமனைகளில் 181 மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 387 உள்ளன. இவற்றில், 500 பயன்பாட்டில் உள்ளன.  மீதமுள்ளவை பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளன.

விரைவில் 50000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவில் தயாராகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது   அதில் இந்த மாத இறுதியில் 14000 கிடைக்கும் எனவும் அதில் டில்லிக்கு 425 விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் ஜூலை முதல் வாரம் அது 600 ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரபல மருத்துவமனையின்  தலைமை மருத்துவர் இந்த வசதிகளை அளிப்பதுடன் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் தேவைப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.