விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை..

படித்து படித்து கெஞ்சினாலும் சரி, அடித்து, உதைத்து அதட்டினாலும் சரி.. கொரோனா விதிகளை மீறுவதே ஜனங்களுக்கு வழக்கமாகி விட்டது.

இதனால் எரிச்சல் அடைந்த  மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் என்ன செய்தார் தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிசுலால் என்பவர் மகனுக்கு அண்மையில் கல்யாணம் நடந்தது.

இதில் கலந்து கொள்ள 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அளவுக்கு அதிகமாகக் கூட்டம் வந்திருந்தது.

கொரோனா அறிகுறிகளுடன் 15 நோயாளிகளும் கல்யாணத்தில் பங்கேற்றனர்.

உச்சமாக அந்த திருமணத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி ஒருவர் பின்னர் இறந்தே போனார்.

போலீசுக்கு தகவல் எட்டியது. வழக்கம் போல், வழக்குப் பதிவு செய்தார்கள்.

செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் ஆவேசமானார்.

15 கொரோனா நோயாளிகளையும், கொரோனா வார்டில் தனிமைப் படுத்தி, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

அவர்களின் பரிசோதனை  கட்டணம், உணவுச்செலவு , ஆம்புலன்ஸ் வாடகை என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ’பில்’ வந்திருந்தது. .

அந்த தொகையை, கல்யாண மாப்பிள்ளையிடம் இருந்து வசூலித்து, முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க உத்தரவிட்டார் கலெக்டர் ராஜேந்திர பட்.

விருந்தாளிகள் தான் கல்யாணத்தில் மொய் எழுதுவார்கள். ஆனால்  மாப்பிள்ளையே ’’மொய்’’ எழுதிய சம்பவம், இதுதான் முதன் முறையாக இருக்கும்.

-பா.பாரதி.