காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு

பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.   இம்மாநிலத்தில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 759 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து 24000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையொட்டி பல இடங்களில் இன்று இரவு 8 மணி முதல் 22 ஆம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் நேற்று செய்தியாளர்களிடம், “கொரோனா தொற்று பெங்களூருவில் வேகமாகப் பரவி வரும் நிலையில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.  பல்வேறு காவல்நிலையத்ஹ்டை சேர்ந்த 200 பேருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 29 காவல்துறையினருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 காவலர்கள் இறந்துள்ளனர்.   கொரோனா தொற்று அறிகுறியுள்ள 517 காவலர்கள் வீட்டிலும்,732 காவலர்கள் அரசு கண்காணிப்பு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  நகரில் சிவாஜி நகர், கலாசிபாளையா, அல்சூர் உள்ளிட்ட 25 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.  அதாவது 50 வயதுக்கு மேற்பட்டோர், அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், தீவிர உடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு பணியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,40 சதவீத மகளிர் காவலர்களுக்கு வீட்டில் இருந்தவாறு பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், வாகனங்களில் வெளியே சென்றுவரும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் நுழையக்கூடாது குற்ற விவகாரங்களில் தொடர்புடையவர்களைத் துணை காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று, கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே கைது செய்ய வேண்டும்,  புகார் அளிக்க வருபவர்களிடம் 6 அடி இடைவெளியுடன் பேச வேண்டும். கிருமி நாசினி தெளிப்பு, சுத்தம் பராமரிப்பு ஆகியவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.