குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 4 நகரங்களில் 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால்  அகமதாபாத் உள்பட 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அம்மாநிலத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 நகரங்களிலும் வரும் 28ம் தேதியுடன் இரவு நேர ஊரடங்கு நிறைவு அடைகின்றது. மேற்கண்ட இந்த 4 நகரத்திலும் அண்மையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

அதை கருத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 5வது முறையாக இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் 2,69,031 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில், 2,62,487 பேர்  குணம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.