போர்பந்தர்

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் திசை மாறியதால் குஜராத் மாநிலத்தை தாக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  அதை ஒட்டி மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  படகுகள், மரம் அறுக்கும் வாள்கள், நவீன தொலை தொடர்பு சாதனங்களுடன் மீட்புப் பணியினர் தயார் நிலையில் உள்ளனர்.   விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.   ரெயில் சேவைகள் இரு தினங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.   அவசர ரெயில் சேவை தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது வானிலை மையம் அளித்துள்ள தகவலின்படி வாயு புயல் திசை மாறி உள்ளதாக தெரிய வந்துள்ளது.   இதனால் வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.   ஆயினும் மீட்புப் பணியினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.