ஐரோப்பியக் குழு வரும் வேளையில் காஷ்மீரில் கல்லெறி தாக்குதல்கள் மீண்டும் தொடக்கம்

ஸ்ரீநகர்

ரோப்பிய நாடாளுமன்றக் குழு காஷ்மீர் வரும் வேளையில் மீண்டும் கல்லெறி தாக்குதல்கள் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

                                                                         மாதிரி புகைப்படம்

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு அமலில் உள்ளது.   முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  முடக்கப்பட்ட தொலைப்பேசி சேவை ஒரு சில இடங்களில் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.  இணையச் சேவை இன்னும் அளிக்கப்படவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு ஒன்று தற்போது காஷ்மீருக்கு வருகை தந்துள்ளது.  இந்தக் குழுவுக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த உறுப்பினர்கள் வலது சாரி ஆதரவாளர்கள் என்பதால் உண்மை நிலை குறித்த தகவல்கள் வெளி வராது என அவர்கள் கூறி வருகின்றனர்.

மாநிலத்தில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு முதன் முறையாக ஒரு குழுவை மாநிலத்தில் அனுமதித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி மாநிலத்தில் பல இடங்களில் மீண்டும் கல்லெறி தாக்குதல் தொடங்கி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஸ்ரீநகரில் வசித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 கட்டுமான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்களை இவ்வாறு சுட்டுக் கொல்வது சமீப காலமாக நின்று இருந்ததாகவும் அது மீண்டும் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.