மூளை நினைப்பதை விரல்கள் செயல்படுத்தாததால் திரையுலகில் இருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன் : அமிதாப் பச்சன்

மும்பை

மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்  உடல்நிலை காரணமாகத் தாம் திரையுலகில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ரண்பீர் கபூருடன் அமிதாப் பச்சன்

மூத்த பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் கடந்த 1969 ஆம் வருடம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்.  இன்று வரை அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இவருடைய தந்தை ஹர்வன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற கவிஞர் ஆவார்.  இவருடைய 112 ஆம் பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.   அமிதாபின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவார்கள்.

தற்போது தனது அடுத்த படமான பிரம்மாஸ்திரா என்னும் படத்தில் நடிக்க அமிதாப் மணாலிக்கு கார் மூலம் சென்றுக் கொண்டிருந்தார்.  இந்த படத்தில் அவருடன் ஆலியா பட், ரண்பீர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அப்போது அவர் தனது பிளாக் வலைத்தளத்தில் தனது எண்ணங்களை பதிந்துள்ளார்.  அதற்கு அமிதாப் பச்சனின் ரசிகர்கள் பெருமளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர்    வழியில் தன்னை சந்தித்த பல ஊர் மக்களும் தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்தியதை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அமிதாப், “இப்போது எல்லாம் நான் விமானப்பயணத்தை தவிர்த்து வருகிறேன்   நீண்ட நேரச் சாலைப் பயணத்தால் மனம் களைப்படைந்தாலும் வழியில் சந்தித்த மக்களின் அன்பினால் நான் அவற்றை மறந்துள்ளேன்.   அருமையான வழி, புத்துணர்வூட்டும் சாலைப்பயணமாக இருந்தாலும் நான் அறைக்குச் சென்று குறைந்த நேர ஓய்வுக்குப் பிறகு காலை 5 மணிக்கு படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டும்.

இப்போது எல்லாம் எனது மூளை நினைப்பதை விரல்கள் செய்ய மறுக்கின்றன.   மனம் செய்ய விரும்பும் வேலைகளை உடல் செய்ய இயலாத நிலை உள்ளது.   இது எனக்குத் திரையுலகில் இருந்து நான் ஓய்வு பெற வேண்டும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது” எனப் பதிந்துள்ளார்.  இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் மனத்துயரை அளித்துள்ளது.

அமிதாப் இவ்வாறு பதிந்த போதிலும் படப்பிடிப்பில் குறித்த நேரத்தில் வந்து விடுவதாகவும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.