கங்கையில் மாசு அதிகரித்ததை மறைத்து ஏமாற்றும் மோடி : காங்கிரஸ்

டில்லி

டந்த 2014ஆம் ஆண்டை விட கங்கை நதியில் மாசு அதிகரித்ததை மறைத்து மக்களை மோடி ஏமாற்றுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கங்கை ஆறு மிகவும் மாசு பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.   அதனால் நமாமி கங்கே எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கங்கையை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின.  இதற்காக இதுவரை ரூ.22238.73 கோடி செலவிடபட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி “நமாமி கங்கே திட்டம் மிகவும் பொய்த்து விட்டது.   வரும் வருடம் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இந்த திட்டத்தில் இதுவரை கால்வாசி பகுதி கூட சுத்தம் செய்யப்படவில்லை.   ஆனால் இந்த திட்டம் பெருமளவு நிறைவேறி விட்டதாக மோடி தவறான தகவலை கூறி மக்களை ஏமாற்றுகிறார்.    இதற்காக வாரணாசி மற்றும் கங்கை நதியில் உள்ள மக்கள் மோடியை மன்னிக்க மாட்டார்கள்

இது குறித்து தகவல் அறியும்  சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளோம்.  அந்த தகவல் கிடைத்ததும் மோடி பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் உள்ள அத்தனை பொய்களும் மக்களுக்கு தெரிய வரும்.    நமாமி கங்கேவில் அறிவிக்கப்பட்ட 221 திட்டங்களில் இதுவரை 58 திட்டங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளன.   அப்படி இருந்தும் கடந்த 2016-17 ஆம் வருட கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையின்படி  கங்கை நதியில் மாசு மேலும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.