அடிபட்ட இஸ்லாமியர் – ஆம்புலன்சை மறித்த குண்டர்கள் – நீதிமன்ற நள்ளிரவு உத்தரவு
டில்லி
டில்லியில் அடிபட்ட இஸ்லாமியரைக் காக்க வந்த ஆம்புலன்சை சில குண்டர்கள் தடுத்ததால் ஆம்புலன்சை யாரும் தடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டில்லியில் மூன்றாம் நாளாகக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடக்கும் தாக்குதல்களில் இதுவரை 12க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் போராட்டக்காரர்கள் ஆம்புஅன்ஸ் மற்றும் பிற வாகனங்களைச் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். அவசர ஆம்புலன்ஸ் உதவி அழைப்பு என்ணான 102க்கு வந்த அழைப்பின் பேரில் நேற்று நள்ளிரவு முஸ்தபாபாத் பகுதியில் அடிபட்ட இஸ்லாமியர்களை அழைத்து வர ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்துள்ளது. ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் அங்கு செல்ல இயலவில்லை.
அங்குக் கலவரம் செய்து வந்த சில குண்டர்கள் அந்த ஆம்புலன்சை செல்ல விடாமல் தடுத்துள்ளனர். காவல்துறையினர் முன்னிலையில் இந்த ஆம்புலன்ஸ் தடுக்கப்பட்டுத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும்.
இந்த தகவல் அறிந்த நீதிமன்றம் நேற்று நள்ளிரவு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அடிபட்டோருக்கு உதவச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகளை எக்காரணம் கொண்டும் யாரும் தடுக்கக் கூடாது எனவும் ஆம்புலன்ஸ்கள் எவ்வித தடையும் இன்றி செல்ல டில்லி காவல்துறையினர் உதவ வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.