டில்லி

நாட்டில் ஜிஎஸ்டி மோசடி அதிகரித்துள்ளதால் ஒரே நாளில்  336 இடங்களில் அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது.     இந்த ஜிஎஸ்டி உள்வரியை மீண்டும் பெறுவதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.  குறிப்பாக ஏற்றுமதி வர்த்தகர்கள் பலர் இவ்வித மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.   அந்த புகார்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் உள்வரிக்காக அளிக்கப்பட்ட ரூ.3500 கோடி  மதிப்பிலான பில்கள் போலி எனக் கண்டறியப்பட்டன.   இவற்றின் மூலம் ரூ.470 கோடி வரை மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.  இந்த மோசடி நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளன.  எனவே ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை மற்றும் வருமான புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் திடீர் சோதனைகள் நடத்தி உள்ளனர்.

இந்த சோதனைகள் 15 மாநிலங்களில் உள 336 இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில்  நடந்துள்ளன.   இந்த சோதனை டில்லி, அரியானா, உத்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்கள் கொள்முதல் செய்த வர்த்தகர்கள் ஆகியோர் அலுவலகங்களில் நடந்துள்ளன.

இந்த சோதனையில் மற்ற சில அரசுத் துறைகளும் பங்கு பெற்றுள்ளன.  கடந்த இரு வருடங்களில் ஒரே நேரத்தில் அதிக இடங்களில் சோதனை நடந்தது இதுவே முதல் முறையாகும்.   இந்த சோதனையின் போது மேலும் பன்மடங்கு  மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   அதிகாரிகள் தரப்பு இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.