பிரியாணிக்குப் பதிலாக குஸ்கா..   ஆத்திரத்தில் தீக்குளித்த மனைவி..

பிரியாணிக்குப் பதிலாக குஸ்கா..   ஆத்திரத்தில் தீக்குளித்த மனைவி..
மகாபலிபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் – சௌமியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கடந்த புதன்கிழமை வெளியே கிளம்பிய மனோகரனிடம் அவரின் வீட்டு உரிமையாளர் பிரயாணி வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டு பணம் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்த சௌமியா தனக்கும் பிரியாணி வாங்கிவரும்படி கேட்டுள்ளார்.  அதற்கு மனோகரன் தன்னிடம் பணம் இல்லாததால் பிறகு வாங்கித்தருவதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
திரும்பி வரும்போது குஸ்கா வாங்கி வந்து கொடுத்துள்ளார்.  பிரியாணி கேட்ட தனக்கு வெறும் குஸ்காவை வாங்கிக்கொண்டு வந்த கணவருடன் சண்டை போட்டுள்ளார் சௌமியா.  இது கடும் வாக்குவாதமாக மாறிவிட ஆத்திரமடைந்த சௌமியா கணவரின் பைக்கிலிருந்து பெட்ரோலைப் பிடித்துக்கொண்டு வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று தன் மேல் ஊற்றி எரித்துக்கொண்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த மனோகரன் போராடி நெருப்பை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.  ஆனால் 80 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்துள்ளார் சௌமியா.
தகவலறிந்து வந்த காவல்துறையினரிடம், “என் கணவர் எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவார் என்கிற நம்பிக்கையில் அவசரப்பட்டு தீ வைத்துக்கொண்டேன்” என்று இறப்பதற்கு முன் வாக்குமூலம் அளித்துள்ளார் சௌமியா.
தேவையில்லாத ஆத்திரத்தினால் ஒன்றுமில்லாத விசயத்தைப் பெரிதாக்கி தானும் அழிந்து குடும்பத்தினரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார் இந்தப்பெண்.
– லெட்சுமி பிரியா