தலித் என்பதால் திருடன் என்கிறார்கள் : பாஜக தலைவர் மீது கூட்டணி எம் எல் ஏ குற்றச்சாட்டு

வாரணாசி

த்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் சோன்கர் தான் ஒரு தலித் என்பதால் தம்மை திருடன் என உ.பி. பாஜக தலைவர் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உ.பி.  மாநிலத்தில் சந்தவுலி மாவட்டத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.   அந்த விழாவில் உபி. மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா, மற்றும் மாநில பாஜக தலைவர் மகரேந்திரநாத் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.    அங்கு ஒரு கல்வெட்டு திறக்கப்பட்டது.   அதில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான கைலாஷ் சோன்கர் பெயர் இடம் பெறவில்லை.

கைலாஷ் சோன்கர் பாஜகவின் கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.  இது குறித்து பாஜக தலைவர் பாண்டே, “இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருடராக மாறி விட்டார்.  அதனால் அவர் பெயரை கல்வெட்டில் சேர்க்கவில்லை” என தெரிவித்தார்.   கூட்டணி கட்சி உறுப்பினரைப் பற்றி பாஜக தலைவர் இவ்வாறு கருத்து கூறியது பகுதி மக்கள் இடையே சர்ச்சையை உண்டாக்கியது.

வரணாசி நகரில் இன்று கைலாஷ் சோன்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடைய கட்சியின் துணைத்தலைவர் நித்யானந்த் பாண்டே உடன் இருந்தார்.  கைலாஷ் சோன்கர், “நான் தலித் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் என்னை பாஜக தலைவர் திருடன் என விமர்சித்துள்ளார்.   இந்த விமர்சனத்தினால் அவர் என்னையும் எனது தொகுதி மக்களையும் அவமதிப்பு செய்துள்ளார்.  அவருடைய இந்த தரக்குறைவான விமர்சனத்துக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என கூறி உள்ளார்.