என் பெற்றோர் பிறப்பிடம் தெரியாததால் சிறை செல்லத் தயார் – சொல்வது ராஜஸ்தான் முதல்வர்!

ஜெய்ப்பூர்: தன் பெற்றோரிடம் பிறப்பிடம் குறித்து விபரம் தெரியாத காரணத்தால், தானே முதல் ஆளாக சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் சிஏஏ-என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக பேராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற அசோக் கெலாட் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அரசியல் சாசன மாண்புக்கு எதிரான சிஏஏ குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைதியை பாதுகாக்க வேண்டுமெனில் அரசே முன்வந்து இந்தச் சட்டத்தை விலக்கிக் கொள்வது அவசியம்.

காங்கிரஸ் கட்சியும் எனது அரசும் போராட்டக்காரர்களின் பக்கம் இருக்கும். தேவைப்பட்டால் முதல் ஆளாக நானே சிறைக்கு செல்வேன். என்பிஆர் தேவைக்காக பெற்றோரின் பிறப்பிடம் பற்றி தகவல் கேட்கிறார்கள். ஒருவேளை என்னால் தகவல் தர முடியவில்லை என்றால், நானும் தடுப்புக் காவலில் இருக்க தயார். ஏனெனில், எனக்கு என் பெற்றோரின் பிறப்பிடம் பற்றி தெரியாது. அசாமில் ஆளும் பாரதீய ஜனதா அரசே என்ஆர்சியை அமல்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சட்டங்களை உருவாக்கும் உரிமை உண்டு. ஆனால் மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலேயே ஆட்சி செய்ய வேண்டும். டில்லியில் ஷாஹின்பாக் பகுதியை போன்று ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன” என்றார்.