மும்பை

காராஷ்டிர அரசின் சத்திரபதி சிவாஜி சிலை அமைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால் சிறப்பு தணிக்கை தேவை என அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலை நிறுவப்பட்டது. அதை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் சத்திரபதி சிவாஜி சிலையும் உத்திரப் பிரதேசத்தில் ராமர் சிலையும் அமைக்கப்பட உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்திரபதி சிவாஜி சிலையை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த சிவாஜி சிலை மும்பை நகரில் அரேபியக் கடலில் ஆளுநர் மாளிகையில் இருந்து சுமார் 1. கிமீ தூரத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை அமைக்க ரூ.3600 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்த சிலை அமைப்பு குறித்து வட்ட கணக்கு அதிகாரி விகாஸ்குமார் தலைமை கணக்களருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், ”இந்த சிலை அமைப்புப் பணிகளில் பல பெரிய முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இது குறித்து ஏற்கனவே மூத்த வட்ட கணக்கு அதிகாரி தகவல் அளித்துள்ளார். ஆகவே இந்த சிலை அமைப்பு திட்டம் குறித்து உடனடியாக சிறப்பு தணிக்கை நடத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட தகவலும் உறுதி செய்துள்ளது.