நாடு முழுவதும் தொட்டில் திட்டம் மூலம் 205 குழந்தைகள் மீட்பு: மேனகா காந்தி தகவல்

டில்லி:

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், ‘‘நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் மற்றும் இதர பகுதிகளில் கைவிடப்பட்ட 205 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகள் உடனடியாக குப்பை தொட்டில்களிலும், புதர்களிலும் வீசி செல்லப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் தொட்டில் குழந்தை திட்டம் ஏற்படுத்தப்பட்டது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இதில் டில்லியின் மட்டும் 58 குழந்தைகள் பெறப்பட்டுள்ளது. அஸ்ஸாம், ஹரியானா உள்ளிட்ட இதரமாநிலங்களிலும் குழந்தைகள் பெறப்பட்டுள்ளது. இது வரை 205 குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

முறையான நடைமுறைகளை பின்பற்றிய பிறகே தொட்டில் குழந்தைகள் தத்து கொடுக்கப்படுகிறது. மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் வாசல்களில் தான் தொட்டில் வைக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தவில்லை’’ என்றார்.

மேனகா காந்தி தொடர்ந்து பேசுகையில்,‘‘ வரும் நாட்களில் இந்த திட்டம் குறித்து முறையாக விளம்பரம் செய்யப்படும். குழந்தைகள் தத்தெடுக்க ஆன்லை முறை கொண்டு வரப்படும். இதன் மூம் சிறிய அளவிலான தத்தெடுப்பு மையங்கள் மேம்படுத்த உதவும். இதற்கு முன் இந்த திட்டத்தில் பல குளறுபடிகள் இருந்தது.

இதனால் மக்கள் குழந்தைகளை தத்தெடுக்க வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. குழ ந்தைகளை தத்தெடுக்க தயாராக இருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், தத்து கொடுக்க கூடிய வகையிலான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. சமயங்களில் தத்தெடுப்பு நடைமுறைகள் நீதிமன்றத்தில் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது’’ என்றார்.

தமிழகத்தில் முதன்முதலாக தொட்டில் குழந்தை திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இந்த திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பல பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கே தமிழக தொட்டில் குழந்தை திட்டம் முன்னோடியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.