அதிர்ச்சி தகவல்: கடந்த 3 ஆண்டுகளில் 373 யானைகள் உயிரிழந்துள்ளன – வனத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக 373 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 75 யானைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

elephant

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவையில் யானைகள் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சகம் 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் வேட்டையாடுதல் மற்றும் விபத்து காரணமாக 373 யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவித்தது.

இதில் 62 யானைகள் ரயிலில் அடிப்பட்டும், 226 யானைகள் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளன. தந்தத்திற்காக 59 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 26 யானைகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன எனவும் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் ரயிலில் அடிப்பட்டு 153 யானைகள் உயிரிழ்ந்துள்ளன.

அதேபோன்று, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 75 யானைகள் இந்தியாவில் இறந்துள்ளன. அவற்றில் 48யானைகள் மின்சாரம் தாக்கியும், 13 யானைகள் ரயிலில் அடிப்பட்டும் இறந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க கடந்த ஒராண்டில் மட்டும் 16 மாநிலங்களை சேர்ந்த 227 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அசாமில் அதிகபட்சமாக 86 பேரும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 45 பேரும் யானை தாக்குதலினால் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.