சென்னை :

டெல்லியில் இருந்து டெல்லி-சென்னை சிறப்பு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் மே 17-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், மும்பை, ஹௌரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்த பக்தர்கள் ஆகியோரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள் மூலம் அனுப்பி வருகிறது.

இந்நிலையில் டெல்லி இருந்து சிறப்பு ரயிலில் 797 பயணிகள் நேற்று  மாலை 8 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில்  வந்தடைந்தனர்.  இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் தங்குவதற்கு 2,500 ரூபாய் பணம் செலுத்திய 274 பயணிகளுக்கு மாநகராட்சி சார்பாக தனியார் விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தாத 523 பயணிகள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ளனர். அனைத்து  பயணிகளுக்கும் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது.