மும்பை:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஆராய, தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பசுமை மண்டலங்களில் திறக்கப்பட்டு வரும் தொழிற்சாலைகளில் ஏற்படும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே மகாராஷ்டிரா அரசு, வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மகராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பணியகம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், இதற்கு தொழில்கள், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய மூன்று துறைகளிடையே ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடு. மேலும், இந்த பணியகம், பணிக்கு ஏற்றபடி பணியாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அவர்கள் மீண்டும் பணிக்கு வர மாட்டார்கள் என்றும் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், திறமையான மற்றும் திறமையற்ற இரு பிரிவுகளிலும் உள்ள பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ஒரு புதிய தொழிலாளர் குழு அமைக்கப்பட உள்ளது என்றும் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறினார்.

தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர், பணியகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், மாநில தகவல் துறை தற்போது பணியகத்திற்கான இணைய தளத்தை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, மாநிலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது உண்மை தான் என்றும் மகாராஷ்டிராவை மீண்டும் கட்டியெழுப்ப பசுமை மண்டலங்களில் உள்ள தொழில்களில் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த முன்வருமாறு உள்ளூர் மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார்.