இஸ்ரேலில் நேதன்யாகுவால் அரசு அமைக்க முடியவில்லை :எதிரணிக்கு வாய்ப்பு

ஜெருசலேம்

ஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் புதிய அரசு அமைக்க முடியாததால் எதிரணியின் பென்னி கண்ட்ஸ் அம்முயற்சியில் இறங்கி உள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இவரது ஆட்சி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி அதிகபட்சமாக 37 இடங்களைக் கைப்பற்றியது.

நேதன்யாகுவுக்கு ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்பட்டதால் பழமைவாத கட்சியான ஐக்கிய டோரா யூத கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தினார்.   இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதில் இருந்து பழமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் பெய்டனு என்ற கட்சி பெஞ்சமின் நேதன்யாகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது.

இதையொட்டி நாடாளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆகக் குறைந்தது. ஆகவே அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் தேர்தலை அறிவித்தார்.   இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களில் 2-வது முறையாக  பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுமார் 92 சதவீத வாக்குகள் பதிவானது.  இந்த தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனத் தகவல்கள் வெளியாகின.

தேர்தல் முடிவுகளின்படி பெஞ்சமின் நேதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சியும், பென்னி கன்ட்சின் ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சியும் தலா 32 இடங்களில் வெற்றி பெற்றதால்  ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் புதிய அரசை அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்பட்டது..

பெஞ்சமின் நேதன்யாகு பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும் ஒரு சுமுக முடிவு எட்டாததால் அவரால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உண்டானது.  எனவே இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் எதிரணியில் உள்ள பென்னி கன்ட்ஸ் இடம் அரசு அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  அவருக்கு அரசு அமைக்க 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி