ஸ்ரீநகர்

காஷ்மீர் வீதிகளில் பிணங்கள் கிடக்கவில்லை என்பதால் மாநிலத்தில் அமைதி நிலவுவதாக அர்த்தம் இல்லை என  ஸ்ரீநகர் மேயர் ஜுனாய்த் ஆசிம் மாட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு  வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகர மேயர்களுக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் அவர்கள் இந்த பிரதேசத்தை நிர்வகிக்க உத்தரவிடப்பட்டது. ஆயினும் ஸ்ரீநகர் மேயரான ஜுனாய்த் ஆசிம் மாட்டு தொடர்ந்து மோடியின் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஜுனாய்த் ஆசிம் மாட்டு ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆவார். இந்த கட்சியின் தலைவர் சஜ்ஜத் லோன் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களைப் போல் தற்போது மத்திய அரசால்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாட்டு தனது அதிருப்தியைப் பல முறை தெரிவித்துள்ளார். மேயர் மாட்டு சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது மத்திய அரசு காஷ்மீர் பகுதியில் அமைதி திரும்பி வருவதாகச் சொல்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேயர் மாட்டு, “கடந்த பல வருடங்களாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது வரை  தீவிரவாதிகளின் வன்முறையை எதிர் கொண்ட எங்களுக்கு தற்போது அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய காஷ்மீர் நிலை ஆகும். காஷ்மீர் வீதிகளில் பிணங்கள் கிடக்கவில்லை என்பதால் மாநிலத்தில் அமைதி நிலவுவதாக அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.,