23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்கள் பயன்படுத்திய 10.34 கோடி டோஸில் மொத்தம் 44.78 லட்சம் தடுப்பூசி அளவு வீணடிக்கப்பட்டதாகவும், இதில்,   தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலேயே அதிக அளவில் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பல கட்டங்களாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்கள் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் விரிவான திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் தடுப்பூசி வீணடிப்பு தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது.

தடுப்பூசி விநியோகம் மற்றும் அதை செலுத்துவதில்,  அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் பலருக்கு சரியான புரிதல் இல்லை என்றும்,  தடுப்பூசி குப்பியில் இருந்து தேவையான மருந்தினை எடுக்க போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்றும், அதன் காரணமாகவே தடுப்பு மருந்துகள் விரையம் ஆகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பூசி குப்பியில் 10 நபர்களுக்கான தடுப்பூசி இருந்தால் அதில் 6 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குப்பி திறக்கப்பட்ட பின்னர், மக்கள் வராமல் போவதால் மட்டுமே இந்த வீணடிப்பு நிகழ்கிறது என்பது மட்டுமே காரணம் இல்லை. தேவையான மக்கள் இருக்கின்ற போதிலும் முறையான பயிற்சி பெறாத தடுப்பூசி வழங்குநர்கள் இருக்கின்ற போது 10 பேருக்கு போட வேண்டிய தடுப்பூசியை 9 நபர்களுக்கே வழங்குகின்றனர் என்று  குற்றம் சாட்டப்படுகிறது.
இரண்டாவது காரணம், தடுப்பூசி தளங்களில் திட்டமிடல் இல்லாதது என்று கூறுகின்றனர். செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு தடுப்பூசி அமர்வும் அதிகபட்சமாக 100 நபர்களுக்கு தேவையான மருந்தினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொலைதூர மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்,  பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதன் காரணமாக தடுப்பூசி மருந்துகள் வீணாகிறது.
இந்த விஷயத்தில் உ.பி., தெலுங்கானா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இந்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஆலோசனையின் போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் நபர்களை திருப்பி அனுப்ப இயலாது. அது தடுப்பூசி தயக்கத்திற்கு வழி வகுக்கும். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி வீணாவதை குறைப்பதை உறுதி செய்வதோடு தடுப்பூசி வழங்குநர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கியபோது, முதல் இரண்டு வாரங்களில், 18-19 சதவீத தடுப்பு மருந்துகள் வீணானது. பின்னர், அவை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதுதொடர்பாக  கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தகவலின்படி,  அதிக பட்சமாக,  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தேசிய சராசரியான 6.5%-ற்கும் அதிகமாக தடுப்பூசியை வீணடித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கானா (17.6 சதவீதம்), ஆந்திரா (11.6 சதவீதம்), உத்தரபிரதேசம் (9.4 சதவீதம்), கர்நாடகா (6.9 சதவீதம்), ஜம்மு காஷ்மீர் (6.6 சதவீதம்). ராஜஸ்தான் (5.6%), அசாம் (5.5%), குஜராத் (5.3%), மேற்கு வங்கம் (4.8%), பீகார் (4%), தமிழ்நாடு (3.7%). வீணடித்ததாக கூறப்பட்டது. இந்த பட்டியலில் தமிழ்நாடு குறைந்த அளவிலான தடுப்பு மருந்துகளையே வீணடித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, தமிழகம் அதிகபட்ச அளவிலான தடுப்பு மருந்துகளை வீணடித்து உள்ளது தெரிய வந்துள்ளது.  ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்கள் பயன்படுத்திய 10.34 கோடி டோஸில் மொத்தம் 44.78 லட்சம் தடுப்பூசி அளவு வீணடிக்கப்பட்டதாகவும், இதில்,   தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலேயே அதிக அளவில் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா,டாமன் மற்றும் டியு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் மருந்து விரையமே ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில்,  தமிழகம் உள்பட சில மாநிலங்கள், தடுப்பூசிகளை கையாள்வதில் மெத்தனமாக செயல்பட்டு, விரையம் செய்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்யது.

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன என்பதற்கான காரணங்களை அறிந்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் எவ்வளவு தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், தடுப்பூசி டோஸ் ஒன்றை வீணடிப்பது, தேவையான நபருக்கான தடுப்பூசி பெறும் உரிமை மறுக்கப்படுவது போன்றதாகும்.

மாநில அரசுகள் இதனை உடனே சரி செய்து, உள்ளூர் மட்டத்தில் தடுப்பூசி வீணடிப்புகளை குறைக்க திட்டமிடல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி வீணடிப்பு ஜீரோவில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.