அசாமில் இன்று முழு அடைப்புக்கு அனுமதி இல்லை : அமைச்சர் அறிவிப்பு

வுகாத்தி

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான இன்றைய முழு அடைப்புக்கு அசாம் அரசு அனுமதி அளிக்காது என அமைச்சர் கூறி உள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம் பாஜக அரசு தேசிய குடியுரிமை சட்டம் 1955ல் திருந்தங்கள் கொண்டு வந்து ஒரு மசோதாவை மக்களவையில் அளித்தது. அந்த திருத்தத்தின் படி வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திருத்தத்துக்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மசோதாவை நிறைவேற்றக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அடைப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவை தெரிவித்திருந்தன. இந்நிலையில் அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அமைச்சர், “கவுகாத்தி உயர்நீதிமன்றம் கடந்த 2013 ஆம் வருடம் முழு அடைப்பு நடத்துவது சட்ட விரோதமானது என தீர்ப்பு அளித்துள்ளது. அதனால் அக்டோபர் 23 ஆம் தேதி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான அடைப்புக்கு அரசு அனுமதி வழங்காது.

அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வர்த்தக நிறுவனங்களும் இயங்கும். அன்று அலுவலகப் பணிக்கு வராத பணியாளர்கள் மற்றும் மூடப்பட வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.