மருத்துவமனையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள் : நீதிமன்றத்தின் புதுமையான தீர்ப்பு

திருச்சி

நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையை  மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்  சுத்தம் செய்தனர்.

திருச்சியில் மணப்பாறை சாலையில் உள்ள தீரன் நகரில் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி உள்ளது.  இந்த கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த பல மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.   இந்த கல்லூரியின் விடுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதியில் தங்கி இருந்த சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் கிரிக்கெட் பேட்டுகள் மற்றும் ஸ்டம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.   அத்துடன் கல்லூரி உணவு விடுதியில் இருந்த சோடா பாட்டில்களையும் வீசி மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.   மோதல் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து 28 மாணவர்களும் ஒற்றுமையாக இருப்பதாக உறுதி அளித்தனர்.  மேலும் வழக்கைக் கைவிடுமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு அளித்தனர்.   இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு புதுமையான தீர்ப்பை வழங்கியது.    அந்த தீர்ப்பில் திருச்சியில் உள்ள கி ஆ பே அரசு மருத்துவமனையை இந்த மாணவர்கள் ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த உத்தரவின்படி நேற்று மருத்துவமனைக்கு வந்த 28 மாணவர்களும் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை செய்தனர்.   இவர்களைக் கண்காணிக்க நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்திருந்தது.   அந்த குழுவும் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காண்டிராக்ட் நிறுவனமும் மாணவர்களை கண்காணித்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

1 thought on “மருத்துவமனையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள் : நீதிமன்றத்தின் புதுமையான தீர்ப்பு

Comments are closed.