அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யாவின் டிவீட்டுகள் முடக்கம்

டில்லி

பாஜகவின் மிக இளைய மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் டிவீட்டுகள் அரசின் வேண்டுகோளுக்கிணங்க முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் அறிவித்துள்ளது.

மூத்த பாஜகவினர் பலர் பொதுவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக் கருத்துக்கள் பதிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இவர்களுக்கு எதிர்ப்பு எழுவதும் பிறகு அந்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதும் அடிக்கடி நிகழ்வது உண்டு.  இளைய தலைமுறை அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை எனப் பல பாஜக அனுதாபிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாஜகவின் மிக இளைய மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் டிவிட்டுகள் கடும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.   அவர் 2015 ஆம் வருடம் பதிந்த டிவீட்டுகள் தற்போது பாஜகவினரால் பகிரப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியல் நிலையை உண்டாக்கி வருகிறது.  அப்போது தேஜஸ்வி சூர்யா இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டு பகிர்ந்தது தற்போது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

அந்த பதிவில் தேஜஸ்வி சூரியா, “சுருக்கமாக உண்மையாகப் பயங்கரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது.  ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒரு மதம் உள்ளது.  அது பல நேரங்களில் இஸ்லாம் ஆக உள்ளது” எனப்  பதிந்திருந்தார்.  தற்போது இந்த டிவிட் பலரது எதிர்ப்பை கிளப்பி விட்டுள்ளது.  பல இஸ்லாமிய ஆர்வலர்கள் தேஜஸ்வி சூர்யாவின் டிவிட்டர் பதிவுகள் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் டிவிட்டர் நிர்வாகம் தேஜஸ்வி சூர்யாவின் சர்ச்சைக்குரிய டிவிட்டுக்களை முடக்கி உள்ளது.   அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த டிவீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ள்தாக் டிவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அபிமானத்தைப் பெற்ற இளம் பாஜக தலைவரின் டிவிட்டர் பதிவுகளை முடக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.