காங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை

--

டில்லி

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி மறுத்ததை ஒட்டி அந்த பதவிக்கு 7 தலைவர்கள்  பெயர் பரிசீலனையில் உள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது.   அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.    இதையொட்டி அவர் தனது  பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.  இதற்குப் பல மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயலரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியிடம் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது.   அதற்கு அவர் மறுத்தார்.  மேலும் தாம் தற்போதைய  பதவியில் தொடர்ந்து பணி புரிய விரும்புவதாக தெரிவித்தார்.   அதையொட்டி தற்போது கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

சுமார் 130 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக் கட்சியில் தொடர்ந்து நேரு-காந்தி குடும்பத்தினர் மட்டுமே தலைவர்களாக உள்ளனர்.    தற்போது இந்த குடும்பத்தின் இளம் தலைவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  கட்சியின் செயற்குழு சார்பில் அடுத்து தலைவர் பகுதிக்கு ஏற்றவர் எனக் கருதுபவர்களின் பெயரை எழுதி சீலிட்ட கவரில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இவ்வாறு வந்த பெயர்களில் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, திக்விஜய சிங், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட் மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த ஏழு பேரில் ஒருவரை ராகுல் காந்தியின்  யோசனைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் பயணம் செய்து வருகிறார்.  அவர் இந்தியா திரும்பிய பிறகு தலைவர் தேர்வு நடைபெறும் என தெரிய வந்துள்ளது.   இது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

You may have missed