மும்பை

பஞ்சாப் – மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர் வங்கி கண்காணித்து வருகிறது. அவ்வாறு கண்காணிக்கும் போது பொருளாதார முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்படும் போது அந்த வங்கிகளின் பல செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. அவ்வகையில் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன.

கடந்த 1984 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கி நாட்டின் மிகப் பெரிய 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வங்கியின் கிளைகள் மகாராஷ்டிரா, டில்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இயங்கி வந்தன. இந்த வங்கிக்கு மொத்தம் 137 கிளைகள் உள்ளன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி புதிய கடன்கள் அளிப்பதை அடியோடு நிறுத்தி உள்ளது. மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து தினம் அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பட்டு விதித்துள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.