வெறிச்சோடிய கோயம்பேடு மார்கெட்: கண்ணீரில் வியாபாரிகள்

மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரமின்றி வெறிச்சோடியது. 50% அளவிலான வியாபாரம் குறைந்ததால் இதுவரை காணாத அளவுக்கு காய்கறிகள் மூட்டை மூட்டையாக அழுகிய நிலையில் தேங்கியுள்ளன. அவற்றை அள்ளிச் செல்ல லாரிகள் வந்தவண்ணமுள்ளன.

koyambedu

சில்லறை வணிகர்கள் சில்லறை பற்றாக்குறையால் வியாபாரத்தை நடத்த முடியாமலும், பணியாளர்களுக்கு தினக்கூலி கொடுக்க முடியாமலும் முற்றிலும் முடங்கிப்போயுள்ளனர். இதன் விளைவாக மொத்த வியாபாரிகள் ஒவ்வொருநாளும் தாங்கள் 50 கோடி வரையிலான நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர்.

கே.செளந்திரபாண்டியன் என்ற வியாபாரி, “கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் நடைபெறும் வியாபாரத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும் இது பாதிக்கும் குறைவாக சரிந்துவிட்டதாக கவலையுடன் கூறுகிறார். மேலும், இங்கு ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையாகிவிட்டது. அவர்கள் அழுகின காய்கறிகளின் மத்தியில் இரவு இங்கேயே தங்கியிருக்கின்றனர், சிலர் சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்று விட்டனர். பணம் எடுக்கும் அளவை 50,000 ஆக்கிவிட்டபடியால் எங்களால் சப்ளையர்களுக்கும் பணம் கொடுக்க இயலவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

பழவியாபாரியான எம்.துரை என்பவர் “கோயம்பேடு மர்க்கெட்டில் தினமும் சராசரியாக 10 முதல் 15 கோடிவரை பழவியாபாரம் நடக்கும். இது கடந்த ஒரு வாரகாலமாக வெறும் 4 கோடியாக சுருங்கி விட்டது. தாம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பழத்தை இறக்குமதி செய்வதாகவும், இப்போது விற்காமல் அழுகிப்போன பழங்கள் மலைபோல குவிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று பெரும்பான்மையான கடைகள் மூடியிருந்ததாகவும் வியாபாரிகள் அழுகிப்போன காய்கறி குவியலின் நடுவே படுத்து தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. எங்களால் கடனுக்கு வியாபாரம் நடத்த இயலாது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிலமை சரியாகாவிட்டால் எங்களால் தாக்குப்பிடிக்க இயலாது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஹரிகிருஷ்ணன் என்ற மொத்த வியாபாரி கடந்த 1996 முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். “நாங்கள் இதுவரை எத்தனையோ சோதனைகளை கடந்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான சூழலை வாழ்க்கையில் சந்தித்ததில்லை என்கிறார். என் சொந்த அக்கவுண்ட்டில் இருந்துகூட என்னால் பணம் எடுக்க முடியவில்லை. பிரதமர் மோடி இப்படித்தான் நாட்டை சீர்திருத்த முடியும் என்று நம்பினால் ஒரு நாள் வந்து கோயம்பேடு மார்க்கெட்டை எடுத்து நடத்தி பார்க்கட்டும். நான் அவருக்கு கீழே சம்பளத்துக்கு வேலை செய்கிறேன்” என்று பொரிந்து தள்ளினார்.

குடியரசு மற்றும் செல்வராஜ் இருவரும் வாழை இலைகளை ஓட்டல்களுக்கு சப்ளை செய்யும் வியாபாரிகள். “கடந்த ஒருவாரமாக வியாபாரம் முடங்கியதால் இலைகள் அத்தனையும் அழுக தொடங்கிவிட்டன. இதுவரை 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை தினமும் நடந்து கொண்டிருந்த வாழை இலை பிசினஸ் இப்போது வெறும் 3 லட்சத்துடன் முடங்கிவிட்டது. தேங்கிக் கிடக்கும் இலைகள் அனைத்தையும் குப்பை லாரியில் ஏற்றி அனுப்ப வேண்டியதுதான்” என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Courtesy: Written by Arun Janardhanan for The Indian Express