ஆண்டு வர்த்தகம் குறைவால் 2 லட்சம் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி யில் இருந்து வெளியேறினர்

டில்லி

வாட் வரியில் இருந்து மாறியவர்களில் 2 லட்சம் வர்த்தகர்கள் ஆண்டு வர்த்தகம் குறைவாக உள்ளதால் ஜிஎஸ்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஜிஎஸ்டி அமுலாக்கத்துக்கு முன்பு வாட் என்னும் மதிப்புக் கூட்டு வரி இருந்து வந்தது. இந்த முறைப்படி அனைத்து வர்த்தகர்களும் மதிப்புக் கூட்டு வரி செலுத்த வேண்டும். ஒரு பொருள் பல இடங்களுக்கு மாறும் போது அதன் மதிப்பில் மாறுதல் உண்டாகும். இந்த முறைப்படி அந்த மதிப்பு கூடிய தொகைக்கு மட்டுமே வரி செலுத்தினால் போதுமானது.

ஜி எஸ் டி அமுலாக்கத்துக்கு பிறகு அனைத்து வரிகளும் ஒன்றிணைக்கப்பட்டன. அதனால் வாட் செலுத்தும் வர்த்தகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி முறைக்கு மாறினார்கள். இவ்வாறு சுமார் 88.61 லட்சம் வணிகர்கள் முதலில் மாறினார்கள். இவர்களில் 24.5 லட்சம் பேர் இதற்கான வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் இணைப்பு மறுக்கப்பட்டது. இதனால் மொத்தம் 64 லட்சம் பேர் ஜிஎஸ்டி க்கு மாறினர்.

இவ்வாறு மாறியவர்களில் சிலரது ஆண்டு வர்த்தகம் ரூ. 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. ஒரு சிலருக்கு ஆண்டு வர்த்தகம்  ரூ.10 லட்சத்தையும் எட்டவில்லை. ஜிஎஸ்டி விதிகளின் படி ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் ஜிஎஸ்டி செலுத்த தேவை இல்லை என்பதாகும்.   எனவே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டி முறையில் இருந்து விலகி உள்ளனர்.