மாரண்ட அள்ளி, தர்மபுரி

நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ரெயில் தடம் புரண்ட நிலையில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்

பெங்களூருவில் இருந்து சேலம் வழியே காரைக்கால் செல்லும் ரெயில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ராயக்கோட்டை மற்றும் மாரண்ட அள்ளி இடையே வந்துக் கொண்டிருந்தது.  அங்கிருந்த ஒரு வளைவில் திரும்பிய போது ரெயில் எஞ்ஜினின் ஒரு பக்க சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.   அந்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தி உள்ளார்.

அந்த இடம் வளைவாக இருந்ததால் ரெயில் மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தது.   ஆகவே உடனடியாக ரெயில் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.  உடனடியாக இது குறித்த தகவல் பெங்களூரு மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.  மீட்புக் குழுவினர் உடனடியாக வந்து ரெயில் எஞ்சினை தூக்கி மீண்டும் தண்டவாளத்தில் வைத்தனர்.

இந்த பணி சுமார் 5 மணி நேரம் நடந்ததால் அப்போது அந்த வழியாகச் செல்ல இருந்த ரெயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.   சமயோசிதநடவடிக்கையால் பல உயிர்களை பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றிய ரெயில் ஓட்டுநருக்கு  ரெயில்வே அதிகாரிகளும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.