Random image

டிவிட்டரில் போலிக் கணக்கு நீக்கம் : டிரம்ப்புக்கு ஆதரவாளர்கள் குறைவு

வாஷிங்டன்

டிவிட்டர் நிர்வாகம் போலிக்கணக்குகளை நீக்கியதால் அமெரிக்க அதிபருக்கு சுமார் 1 லட்சம் ஆதரவாளர்கள் (FOLLOWERS) குறைந்துள்ளனர்.

சமூக வலை தளங்கள் மூலம் பலவித வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.   குறிப்பாக குழந்தைகள் கடத்தல்,  வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்,  பரவி வரும் நோய் என  பல பொய்த் தகவல்கள் போலிக் கணக்குகள் மூலம் டிவிட்டர் உள்ளிட்ட  சமூக தளங்களில் பரப்பப் படுகின்றன.   இதை ஒட்டி டிவிட்டரில் இருந்து போலிக் கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை டிவிட்டரில் 70 லட்சம் போலிக் கணக்குகள் நீக்கப் பட்டுள்ளன.  இதன் மூலம் பல பிரபலங்கள் தங்களது ஃபாலோயர்களை இழந்துள்ளனர்.   அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒருவர் ஆவார்.     இந்த  போலிக் கணக்குகள் நீக்கத்துக்கு பிறகு  அவருடைய ஆதரவாளர்களில் சுமார் 1 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.

அதே போல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் மிகப் பெரிய அளவில் ஆதரவாளர்கள் குறைந்துள்ளனர்.   ஒபாமாவுக்கு சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் குறைந்துள்ளனர்.   இந்தியப் பிரமுகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.   எனினும் இந்தியப் பிரபலங்களுக்கும் கணிசமான அளவு ஆதரவாளர்கள் குறையலாம் என கூறப்படுகிறது.