வாக்கு ஒப்புகை சீட்டுக்கள் காணவில்லை : ஐதராபாத் ஜூபிளி தொகுதியில் மறு தேர்தலா?

தராபாத்

தராபாத் நகரின் ஜுபிளி ஹில் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இயந்திரத்தில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இல்லாததால் பரப்பரப்பு உண்டாகி காங்கிரஸ் கட்சி மறு தேர்தலை கோரி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்றது.   இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப் பட்டது.   அந்த இயந்திரங்கள் அனைத்தும் நேற்று முன் தினம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பத்திரமாக வைத்து பூட்டப்பட்டது.

அப்போது ஜுபிளி ஹில் தொகுதியில் பயன்படுத்தப் பட்ட ஒரு வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் இருந்த சீட்டுக்கள் அகற்றப்பட்டிருந்தது காங்கிரச் பிரதிநிதியால் கண்டு பிடிக்கப்பட்டது.    இவ்வாறு அந்த சீட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவிதார்.

தேர்தல் விதிமுறைகளின் படி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு பதிவு செய்ய முடிவுக்குப் பின் 45 நாட்கள் கால அவகாசம் உள்ளது.   அதுவரை இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் அகற்றப்படக் கூடாது.   ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றால் மட்டுமே அதன் பிறகு சீட்டுக்கள் அகற்றப்படலாம்.

இந்த விதிமுறையை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் இந்த தொகுதியில் முறை கேடு நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளது.   அத்துடன் தேர்தல் ஆணையம் இந்த தொகுதியில் மறு தேர்தல் அறிவிக்க வேண்டும் எனவும் இந்த தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.   அத்துடன் அனைத்து வாக்குப் பதிவு மற்றும் வாக்கு  ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி தன கிஷோர், “வாக்கு எண்ணிககி முடிந்ததும் இந்த இயந்திரத்தில் இருந்த ஒப்புகை சீட்டுக்கள் ஒரு அதிகாரியால் எடுக்கப் பட்டுள்ளது.   அந்த அதிகாரியிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.   அத்துடன் அனைத்து இயந்திரங்களும் ஏற்கனவே அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.