வளர்த்த குடும்பம் சிறை சென்றதால் ஆதரவற்ற நாய் : போலிஸ் அடைக்கலம்

சோட்டி பஜாரியா, மத்தியப் பிரதேசம்

ரு குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் அவர்களது வளர்ப்பு நாய் காவல்துறையினரிடம் அடைக்கலம் புகுந்துள்ளது.

பொதுவாக நாய்களை மனிதனின் நண்பர் என சொல்வது வழக்கம். அத்துடன் தம்மை துன்புறுத்தியோர் மீதும் அன்பு செலுத்துவது நாயின் பழக்கம் என நாய் வளர்க்கும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கைகளை பொய்யாக்குவது போல் மனிதர்கள் சிலர் ஒரு நாயின் நண்பர்களாகி தங்களை தாக்க வந்த நாய்க்கு அடைக்கலம் அளித்துள்ளனர்.

சோடி பஜாரியா காவல்நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு சிற்றூரில்  மனோகர் அகிர்வார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்,  இவர்கள் அனைவரும் சேர்ந்து சொத்து தகராறு காரணமாக மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ஐவரை கொன்றுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த குடும்பத்தினரை கைது செய்துள்ளனர்.

மனோகர் அகிர்வார் லாப்ரடார் நாய் ஒன்றை சுல்தான் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.  கைது செய்ய வந்த காவல்துறையினரை நாய் மூர்க்கத்தனத்துடன் விரட்டி உள்ளது. அதை கட்டி போட்டுவிட்டு ந்த குடும்பத்தில் உள்ள ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு அந்த நாய் அனாதையாகி விடும் என உணர்ந்த காவல்துறையினர் அக்கம்பக்கம் உள்ளவர்களை இந்த நாயை பார்த்துக் கொள்ள சொல்லி கேட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

அதையொட்டி பரிதாபம் கொண்ட காவல்துறையினர் நாயை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அடைக்கலம் அளித்துள்ளனர். அந்த நாய் தற்போது காவலர்கள் பராமரிப்பில் வளரத் தொடங்கி உள்ளது. காவல் நிலையத்தில் பத்திரமாக வசித்து வரும் நாய் தற்போது காவல்துறையினரிடம் மிகவும் நட்புடன் நடந்துக் கொள்கிறது.