அயோத்தி தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை: அசாதுதீன் ஓவெய்சி கருத்து

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தியை தந்திருக்கிறது என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவெய்சி கருத்து கூறியிருக்கிறார்.

நாடே பரபரத்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்து இருக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.

தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தீர்ப்பில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்து இருக்கிறது.

இந் நிலையில், மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவெய்சி, தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது: இந்த தீர்ப்பு இறுதியானது. ஆனால் எங்களுக்கு அதில் திருப்தி இல்லை.

நாங்கள் சட்ட உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடினோம். 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு தானமாக தருவதை விரும்பவில்லை. அது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம்.

தானமாக ஒரு நிலத்தை வாங்கி, அதில் மசூதி கட்டும் அளவுக்கு இஸ்லாமியர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல. இனி இந்தியாவை இந்துநாடாக பாஜக கட்டமைக்கும்.

காங்கிரஸ் இந்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறது. கோயில் கட்டுவதற்கான வழியை மட்டும் இந்த தீர்ப்பு தரவில்லை. பாஜக மற்றும் அனைத்து கட்சிகளும் அரசியலாக்கும் வாய்ப்பை அடைத்திருக்கிறது.

மதத்தின் பெயரால், வாக்கு வங்கி அரசியலுக்காக ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். அது காங்கிரசின் கருத்தில் இருந்து வெளிப்பட்டு இருக்கிறது. அனைவரும் அதை பார்த்துக் கொண்டு தான் உள்ளோம் என்றார்.