ஜோத்பூர்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம் மீது பள்ளி முதல்வர் மேலும் குற்றம் சாட்டி உள்ளார்.

உத்திரப்பிரதேச பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவித்த ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளார்.   இந்த வழக்கில் பாதிக்கபட்ட சிறுமி படித்த பள்ளியின் முதல்வர் இது பற்றி கூறியதாவது :

”பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகானாப்பூரில் படித்து வந்த பள்ளியின் முதல்வராக நான் பணி புரிந்தேன்.   இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமிக்கு வயது 16 ஆகி இருந்தது.    ஆனால் சாமியார் ஆசாராமை சேர்ந்தவர்கள் என்னை பள்ளி சான்றிதழை மாற்றி அந்தச் சிறுமிக்கு 18 வயதுக்கு மேல் ஆகியதாக காட்டச் சொன்னார்கள்.   என்னை பல விதத்தில் மிரட்டினார்கள்.   நான் அவ்வாறு மாற்ற மறுத்து விட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் வருடம் அந்தப் பென்ணுக்கு பேய் ஓட்டுவதற்காக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்ற போது இந்த பலாத்காரம் நடைபெற்றுள்ளது.  இந்த வழக்கில் சாமியாருக்கு எதிராக சாட்சி சொன்ன 9 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.  அதில் மூவர் மரணம் அடைந்து விட்டனர்.   இந்த வழக்கை  விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இதை செய்தியாக்கிய பத்திரிகையாளர்களுக்கும் பல முறை மிரட்டல்கள் வந்துள்ளன.