தீர்ப்பைக் கேட்டு உடைந்து போய் நடுநடுங்கிய ஆசாராம் பாபு

ஜோத்பூர்

சிறுமி பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு நடுங்கிப் போனதாக தகவல்கள் வந்துள்ளன.

வடநாட்டின் புகழ்பெற்ற சாமியார் ஆசாராம் பாபு.   கடந்த 2013 ஆம் வருடம் இவர் ஆசிரமத்துக்கு 16 வயதுச் சிறுமி ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.   அவரை பேய் பிடித்திருப்பதாகவும் அதை ஓட்ட வேண்டும் எனவும் சிறுமியின் பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.   பேயை ஓட்டுவதாகச் சொல்லி அந்தப் பெண்ணை தனிமையில் சந்தித்த சாமியார் ஆசாராம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.   மேலும் இதை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணை கொன்று விடுவதாக சாமியார் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அதை ஒட்டி சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் மீது வழக்கு நடைபெற்றது.   ஜோத்பூர் சிறையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.   இந்த வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி எனவும் அவருக்கு ஆயுள் தண்டனை  வழங்குவதாகவும் நீதிபதி  கூறிய உடன் அதைக் கேட்ட சாமியார் உடைந்து போய் உள்ளார்.

இது குறித்து சிறை சூப்பிரண்ட் விக்ரம் சிங், “தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஆசாராம் பாபு உடைந்து போய் நடு நடுங்க தொடங்கினார்.  அத்துடன் அங்கிருந்த தனது வழக்கறிஞர்களிடம் ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என புலம்பிய வண்ணம் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.

அவருடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு 20 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.