Random image

ராஜஸ்தான்: ஆயுள் தண்டனையை குறைக்க கோரி சாமியார் ஆசாராம் கருணை மனு

ஜெய்ப்பூர்:

பாலியல் பலாத்கார வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைக்க கோரி ராஜஸ்தான் ஆளுநருக்கு சாமியார் ஆசாராம் கருணை மனு அளித்துள்ளார்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜாத்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2ம் தேதி மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்குக்கு ஆசாராம் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்துறைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அந்த மனுவில்,‘‘ ஆயுள் தண்டனை என்பது எனது வயதுக்கு விதிக்கப்பட்ட கடினமான தண்டனையாகும். அதனால் இதை குறைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு ஜோத்ப்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் கைலாஷ் திரிவேதி கூறுகையில்,‘‘ ஆசாராம் கருணை மனு வரப்பெற்றுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அறிக்கை கோரப்பட்டுள்ளது’’ என்றார். மேலும் ராஜஸ்தான் மாநில சிறைத் துறை இயக்குனருக்கும் இந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமியை 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இரவு ஜோத்பூர் அருகில் உள்ள மானாய் பகுதிக்கு குழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமி புகாரி அளித்திருந்தார். அவர் உத்தரபிரதேசம் சாஜகான்பூரை சேர்ந்தவர். மத்திய பிரதேசம் சிண்ட்வாராவில் உள்ள ஆசாராம் ஆஸ்ரமத்தில் தங்கி பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.