இந்தூர்: காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு முதல் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, பல ஆண்டுகள் தவம் செய்தும், கர்வம் அடங்காத துறவியாக இருக்கிறார் நரேந்திர மோடி என சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது, “தவம் என்பது கோபம் மற்றும் வெறுப்பை அகற்றும் அம்சமாகும். ஆனால், மோடியின் விஷயத்தில் இவை எதுவும் நடக்கவில்லை. அவரின் குணாதிசயம் அப்படியேதான் இருக்கிறது.

மத்தியில் இருக்கும் பாரதீய ஜனதா அரசாங்கம் அகந்தை நிரம்பிய அரசாக இருக்கிறது. அது மக்களுடன் நேரடியாக பேசுவதில்லை. மக்கள் எதிர் கேள்வி கேட்க முடியாத பொதுக்கூட்டங்களை மட்டுமே, மக்களுடன் பேசுவதற்கான வழியாக தேர்வு செய்கிறது.

நரேந்திர மோடிக்கு தனது வாரணாசி தொகுதியில் ஏழைகளையும் விவசாயிகளையும் சந்தித்து, அவர்களின் துயரம் நீங்குவதற்கு தான் என்ன தவம் செய்ய வேண்டுமென கேட்க நேரமே கிடைக்கவில்லை” என்று மத்தியப் பிரதேச மாநில ரட்லம் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

பிரியங்கா பேசுவதற்கு சில மணிநேரங்கள் முன்பாகத்தான், மோடி அந்நகரில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.