தேசிய சின்னம் : வசுந்தர ராஜேவின் உத்தரவை மாற்றிய அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்

தேசிய சின்னம் அரசு ஆவணங்களில் இடம் பெற வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

நமது நாட்டின் தேசிய சின்னமாக அசோக ஸ்தூபி அறிவிக்கப்பட்டுள்ளது.  நான்கு சிங்க முகமும் அசோக சக்கரமும் கொண்ட அந்த ஸ்தூபியின்  படம் அனைத்து அரசு ஆவணங்களிலும் கடிதத் தாள் (LETTER HEAD)களிலும் அச்சடிக்கப்பட்டிருப்பது வழக்கமாகும்.   இது  அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடை முறைகளாகும்.

கடந்த 2017ஆம் வருடம் டிசம்பர் 17 அன்று  இந்த நடைமுறையை ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே மாற்றினார்.  அதன்படி தேசிய சின்னமான அசோக ஸ்தூபிக்கு பதில் ஜனசங்க கட்சி நிறுவனர் பண்டிட் தீன் தயாள்  உபாத்யாயா வின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

பாஜக இதற்கு முன்பு ஜனசங்க கட்சியாக இயங்கி வந்தது.

பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா

இந்த முறை ராஜஸ்தான் மாநில அனைத்து அரசு ஆவணங்கள் மற்று,ம் கடிதத் தாட்களில் மாற்றப்பட்டது.  இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.   அரசு ஆவணங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் நிறுவனர் புகைப்படம் இடம் பெறுவது தவறான முன்னுதாரணம் என அக்கட்சி தெரிவித்தது.

ஆயினும் பாஜக அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறவில்லை.   தொடர்ந்து அசோக ஸ்தூபிக்கு பதில் தீன் தயாள் உபாத்யாயா வின் படம் இடம் பெற்று வந்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.   அம்மாநிலத்தில் அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.   தற்போது காங்கிரஸ் மொத்தமுள்ள 199 இடங்களில் 99 இடங்களை வென்றுள்ளது.

முதல்வர் அசோக் கெலாட் இனி அரசு ஆவணங்கள் மற்றும் கடிதத் தாள் உள்ளிட்ட அனைத்திலும் தேசிய சின்னமான அசோக ஸ்தூபி இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.   மேலும் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா படம் இடம் பெற வேண்டும் என்னும் முன்னாள் முதல்வரான வசுந்தர ராஜேவின் உத்தரவை கெலாட் ரத்து செய்துள்ளார்.