வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுடன் காங். பொதுச்செயலாளர் அசோக் கெலாட் திடீர் சந்திப்பு

பாட்னா:

டல்நலக்குறைபாடு காரணமாக வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வரும் ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலுவுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, லாலு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாக அவர் கூறினார்.

லாலுவுடன் அசோக் கெலாட் சந்திப்பு

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும்,  முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பீகார் மாநில முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் உடல் நலமில்லாமல் டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன் காரணமாக, லாலுவை உடனடியாக எய்ம்சில் இருந்து வெளியேற்றியது மத்திய அரசு.

இந்த நிலையில், லாலுவின்  உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஞ்சி உயர்நீதி மன்றம், லாலு சிகிச்சை பெறும் வகையில்  அவருக்கு 2 முறை 6 வாரம் ஜாமின் வழங்கி இருந்தது. இதன் காரணமாக தற்போது ஜாமினில் உள்ள லாலு, வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழ்நிலையில், பீகாரில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்த, முன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வரும், அகில இந்திய  காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட், இன்று காலை லாலுவின் வீட்டுக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அப்போது, லாலுபிரசாத் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்தார்.